கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு நீட் தேர்வுக்கான அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோரையும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோரையும் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் நீட் தேர்வு எந்த மாற்றமும் இல்லாமல் நடத்தப்பட்டாலும், மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகள் கல்வி பயின்று வந்தனர். இளநிலைப் பிரிவில் 15 சதவிகிதமும், முதுநிலைப் பிரிவில் 50 சதவிகிதமும், மாநிலங்களால் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்ட அனைத்திந்திய ஒதுக்கீட்டின் மூலம், தகுதியின் அடிப்படையில் எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் கல்வி பெறலாம் என வழிவகை செய்யப்பட்டது.
உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாணவர் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பரிந்துரைக்கப்படும் மதிப்பெண்ணப் பெற்றிருந்தால், தமிழ்நாட்டில் உள்ள நல்ல மருத்துவக் கல்லூரி ஒன்றில் கூட அவருக்கு அனைத்து இந்திய ஒதுக்கீட்டின் படி இடம் கிடைக்கும். அதே வேளையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு பரிந்துரைக்கும் மதிப்பெண்ணுக்குக் குறைவாக அவர் பெற்றிருந்தால், அவரது சொந்த மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரியிலேயே சேர்ந்து கொள்ளலாம்.
மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், ஈ.எஸ்.ஐ.சி கல்லூரிகள், ராணுவத்துறையில் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் அனைத்து இடங்களும் அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
2007-ஆம் ஆண்டு வரை, மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. 2007-ஆம் ஆண்டு, ஜனவரி 31 அன்று, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு எதிராக அபய்நாத் என்பவர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் பட்டியல் சாதியினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடும் அளித்தது.
அதே ஆண்டில், மத்திய அரசு மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு வெளியே அளிக்கப்படுவதால், அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் அளிக்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனைப்போல, பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடும் மத்திய அரசு நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டதோடு, மாநிலங்களின் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்படவில்லை.
தற்போது, அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து இளநிலைப் படிப்பில் 1500 மாணவர்களும், முதுநிலைப் படிப்பில் 2500 மாணவர்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவில் இளநிலைப் படிப்பில் 550 மாணவர்களும், முதுநிலைப் படிப்பில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு கடந்த 2017 முதல் 2020 வரை அமலில் இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை இழந்திருப்பதாக கூறப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து, அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2021-22ஆம் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு, ஜூலை மாதம் நீட் தொடர்பான அறிவிப்பு வந்த போது, அதில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் ஆகிய பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் நீதிமன்றத்தை அணுகின. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு, மத்திய அரசு அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. எனினும், நீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள NTA இணையதளத்தில் `உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமானி வழக்கில் வரும் தீர்ப்பைப் பொருத்து, அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாநிலக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தெளிவுசெய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.