2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது.
சரக்கு போக்குவரத்து:
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. இதேபோல், முந்தைய ஆண்டு ரூ.1,17,212 கோடியாக இருந்த சரக்கு வருவாய், தற்போது ரூ.1,35,387 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 129.12 மில்லியன் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து 2023 ஜனவரி மாதம் 134.07 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4% சதவீதம் அதிகமாகும். மேலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.13,172 கோடியாக இருந்த சரக்குப் போக்குவரத்து வருவாய், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.14,709 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 13% அதிகமாகும்.
மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்த வரலாற்றை தெரிந்து கொள்வோம்.
ரயில்வே பட்ஜெட்:
2017 ஆம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் என இரண்டு வகையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.
பிப்ரவரி 25, 2016 அன்று, சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த கடைசி ரயில்வே அமைச்சர் ஆவார் . அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில், பிப்ரவரி 1, 2017 அன்று ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் இணைக்கப்பட்ட மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அருண் ஜெட்லி பெற்றார்.
இதன் மூலம், 1924 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொடங்கிய தனி ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட்டுகளின் 92 ஆண்டுகால நீண்ட வரலாறு முடிவுக்கு வந்தது.
பிபேக் தேப்ராய் குழு:
2015 ஆம் ஆண்டில், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் தலைமையிலான நிதி ஆயோக்கின் உயர்மட்ட குழு, தனி ரயில்வே பட்ஜெட் வைத்திருக்கும் நடைமுறையை கைவிட பரிந்துரைத்தது. இந்த அறிக்கை அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது, அவர் ரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டுடன் இணைக்குமாறு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து ரயில்வே பட்ஜெட்டானது பொது பட்ஜெட்டானது இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.