போப் செய்தியாளர் சந்திப்பு:


அமைதியை பரப்பும் நோக்கில் உலகின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், கிறித்துவ மதத்தலைவரான போப் அடுத்த ஆண்டு  இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.  காங்கோ மற்றும் தெற்கு சூடானில் 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ரோம் நகருக்கு திரும்பும் போது போப் தனது அடுத்தகட்ட பயணத்திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.


இந்தியாவில் சுற்றுப்பயணம்:


அப்போது, “வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு செல்லவிருக்கிறேன். அதன் பிறகு முதன்முறையாக மங்கோலியாவுக்கு செல்ல இருப்பதோடு,  அடுத்த ஆண்டு இந்தியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஆனால், மங்கோலியா செல்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வாய்ப்புள்ளது” என போப் பிரான்சிஸ் கூறினர். இந்தியாவிற்கு போப் வருவது, கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும் முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போப்பின்  திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப் இந்தியா வர உள்ளார்.


பிரதமர் மோடி - போப் சந்திப்பு:


முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிஸை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். கடந்த 2013ம் ஆண்டு போப் ஆக பொறுப்பேற்ற பிரான்சிஸை, இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். அப்போது,  போப் உடனான மோடியின் சந்திப்பு 20 நிமிடங்கள் நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், இருவரும் ஒரு மணி நேரம் விவாதித்தனர்.  அப்போது,  கொரோனா வைரஸ் பரவல்,  வறுமை ஒழிப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு என பல்வேறு விவகரங்கள் குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 


அழைப்பு விடுத்த மோடி:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசியதாகவும், போப்பை இந்தியாவிற்கு வரும்படி அழைத்ததாகவும்” பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், அவரது அழைப்பை ஏற்று போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். கடைசியாக கடந்த 1999ம் ஆண்டில் அப்போது போப் ஆக இருந்த இரண்டாவது ஜான் பால் தான், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போதும், பாஜகவை சேர்ந்த வாய்பாய் தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.