ரயில்வே வாரியத் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைவிட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குக் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 


ரயில்வே தேர்வு:


மத்திய ரயில்வே வாரியத்தின் சென்னை பிராந்திய மண்டலத்தில் குரூப் டி பணிகளுக்கான 1,03,769 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் லெவல் - 1 வகையின்கீழ் பல்வேறு வகையான பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான கணினி வழி தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17 முதல் அக்டோபர் 11 வரை நடைபெற்றது. பணி இடங்களுக்குத் தேவையானோரைவிட 3 மடங்கு தேர்வர்கள், உடல் தகுதித் தேர்வுக்குத் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். 


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்று முடிந்தவுடன் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து தேர்வானவர்களுக்கு பணி வழங்கப்பட உள்ளது.






கட்-ஆஃப் மதிப்பெண்கள்:


இந்நிலையில் உடல் தகுதித் தேர்வுக்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை ரயில்வே தேர்வு வாரியம் நிர்ணயித்து அண்மையில் வெளியிட்டுள்ளது. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. ( காண: https://www.rrbchennai.gov.in/downloads/rg-cutoff-pet.html )


இதன்படி, உடல் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள எஸ்சி பிரிவினருக்கு, 86.46 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எஸ்.டி. எனப்படும் பழங்குடி இன தேர்வர்களுக்கு, 81.4 சதவீதமாக உள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 77.91 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. 


பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பின்னணி 


பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா  2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.




எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வராத பொதுப்பிரிவினர் EWSக்கான 10% இட ஒதுக்கீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 1000 சதுர அடிக்கு குறைவான சொந்த வீடு இருக்கலாம். 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை பெற வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையே பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு எஸ்.சி, எஸ்.டி, ஓபிசிக்களின் கட் ஆப் மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் பெற்ற உயர்த்தப்பட்ட சாதியினருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைத்த தகவல்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.