இந்திய ரயில்வேயில் தற்போது உள்ள நடைமுறைப்படி, கடைசி நேரத்தில் நமது பயணத் தேதியை மாற்ற வேண்டும் என்றால், ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால், நேரம் மற்றும் பண இழப்பு ஏற்படும். ஆனால், இனி அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆம், டிக்கெட்டை ரத்து செய்யாமலேயே பயணத் தேதியை மாற்ற, புதிய நடைமுறையை கொண்டு வருகிறது ரயில்வேத் துறை. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
மக்களின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில்
இந்தியாவில், மக்களின் முக்கியமான போக்குவரத்துகளில் ஒன்று ரயில். நீண்ட தூர பயணம் என்றாலே, மக்களின் முதல் தேர்வாக ரயில் தான் இருக்கும். அதேபோல், முன்கூட்டியே திட்டமிடப்படும் பயணங்களுக்கு, முன்கூட்டியே டிக்கெட்டுகளை புக் செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் ரயிலில் உள்ளது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் ரயிலை முதல் தேர்வாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறை, தினம்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் பேசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும்போது ஏற்படும் நேரம், பண இழப்பு
பொதுவாக, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவார்கள். இதனால், திட்டமிட்டப அவர்கள் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக மாற்றியது ரயில்வே துறை. அதன்படி, 120 நாட்களுக்கு முன்பே பயணிகள் தங்கள் டிக்கெட்டுகயை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த சூழலில், ஏராளமான பயணிகளுக்கு, ஏதாவது ஒரு காரணத்தால் கடைசி நேரத்தில் பயண தேதியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அந்த நேரத்தில், அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால், இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒன்று கால விரயம். இண்டாவது, பண இழப்பு. ஆம், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும்போது, அதற்கென ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அதன்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை 48 முதல் 12 மணி நேரங்களுக்கு முன்பாக ரத்து செய்தால் கேன்சலேஷன் தொகையாக 25% பிடித்தம் செய்யப்படும். அதேபோல், 12 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால் அதைவிட கூடுதலான தொகை பிடித்தம் செய்யப்படும். மேலும், ரிசர்வேஷன் சார்ட் தயாராகிவிட்டால், டிக்கெட்டை ரத்து செய்யவே முடியாது, மொத்த தொகையும் போய்விடும்.
புதிய மாற்றம் குறித்து அறிவித்த மத்திய ரயில்வே அமைச்சர்
இப்படிப்பட்ட சூழலில், பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டுவருகிறது ரயில்வே துறை. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கனவே உள்ள நடைமுறை நியாயமற்றதாக இருப்பதாகவும், பயணிகளுக்கு நலன் பயப்பதாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், வரும் ஜனவரி மாதம் முதல் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டின் தேதியை, அப்படியே வேறு ஒரு புதிய தேதிக்கு கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
எனினும், புதிய தேதியில் ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்றும், அந்த நேரத்தில் ரயிலில் உள்ள இருக்கைகளின் நிலையை பொறுத்தே கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், புதிய தேதியின்படி டிக்கெட் விலையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அந்த அதிகப்படியான தொகையை மட்டும் பயணிகள் செலுத்த வேண்டிவரும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.