ஒடிசாவில் நடைபெற்ற கோர விபத்து ரயில்வேதுறையில் உள்ள பல்வேறு குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
கோர விபத்து:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நடைபெற்ற 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா சந்தித்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்நிலையில், ரயில்வேதுறையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தான், இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி,
- முதல் ரயில் பெட்டி கவிழ்ந்தது தொடர்பான தகவலை டிராக் மேன் வழங்கவில்லை
- டிராக் மேன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தான், குறிப்பிட்ட மார்கத்தில் வரும் மற்ற ரயில்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படும்
- குறிப்பிட்ட டிராக் மேன் தான் அவ்வழியாக வரும் வேறு ரயிலை ரெட்-சிக்னல் கொடுத்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்
- ஒவ்வொரு ஆண்டும் 4,500 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரயில்வே தண்டவாளங்கள் பழுதடைகிறது. ஆனால், 2500-லிருந்து 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கான தண்டவாளங்கள் மட்டுமே பழுது பார்க்கப்படுகிறது.
- 2018-ம் ஆண்டு வெளியான மத்திய அரசின் அறிக்கையின் படி, 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான தண்டவாள பழுதுபார்க்கும் பணிகள் நிலுவையில் இருந்துள்ளன
- சராசரியாக ஆண்டிற்கு 200 சிக்னல்கள் பழுதடைகின்றன. அவற்றில் 100 மட்டுமே புதியதாக மாற்றப்படுகின்றன
- தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை உடனடியான பழுதுபார்க்கும் பணிகளில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை
- தகவல் பரிமாற்றம் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது
”கவாச்” தொழில்நுட்பம் என்ன ஆனது?
இதனிடையே, ரயில் மோதல் மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ”கவாச்” எனும் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு அம்சமானது, எதிரெதிர் திசைகளில் விரையும் 2 ரயில்களும் விபத்துக்குள்ளாகும் சூழலில், சுமார் 400 மீட்டருக்கு முன்னதாகவே 2 ரயில்களின் இன்ஜின்களின் செயல்பாட்டையும் முடக்கும் திறன் கொண்டது. சிவப்பு விளக்கு சிக்னல் ஒளிரும்போது, ரயில் ஓட்டுநர் அலட்சியமாக இருந்தாலும் கவாச் உதவியால் ரயில் இன்ஜினின் செயல்பாடு முடக்குவது. அதேபோல இணைப்பு பாதைகள் குறுக்கிடும்போது, ரயிலின் வேகத்தை தாமாகவே குறைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பரபரப்பான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ரயில் வழித்தடங்களில் ரயில் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், 34,000 கிலோமீட்டர் ரயில் பாதையில் கவாச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே வாரியம் கடந்தாண்டு இறுதியில் ஒப்புதல் அளித்தது. ஆனால், ஒடிசாவில் இந்த மோசமான ரயில் விபத்து நடந்த தடத்தில் கவாச் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்படவில்லை என ரயில்வேதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்து இருந்தால், இந்த கோர விபத்து தடுக்கப்பட்டு இருக்கலாம்.