ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் விபத்து:
பாலசோர் பகுதியில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது. 900-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் உள்ளிட்ட அரசு இயந்திரம் முழுவதுமாக அங்கு களமிறங்கியுள்ளது. சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்கு மத்தியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்தது எப்படி?
- நேற்று மாலை 3.20-க்கு ஷாலிமார் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
- நேற்று மாலை 6.30 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் வந்தடைந்தது.
- அங்கு 5 நிமிடங்கள் நின்ற பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கியது கோரமண்டல் விரைவு ரயில்
- பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் 6.50 மணிக்கு பனாபனா ரயில் நிலையத்தை வந்தடைந்தது
- இதனிடையே, சுமார் 7 மணியளவில் யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் பாகாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது
- அவ்வாறு தடம்புரண்ட அந்த ரயிலின் சில பெட்டிகள் அருகிலிருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளது
- இந்த சூழலில் சில நிமிட இடைவெளியில் எதிர்திசையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், வழித்தடத்தில் விழுந்திருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது
- இதனால் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்த கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
- அவ்வாறு தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியுள்ளன
- கோரமண்டல் விரைவு ரயிலின் 17 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்ததால் அந்த ரயில் பெரும் சேதமடைந்தது
- கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் ரயில்வே தண்டவாளங்களை தாண்டி சாலை ஓரமும் விழுந்தன
- 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் முதலில் தடம் புரண்ட ஹவுரா விரைவு வு ரயிலில் 3 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதால் அதில் சேதம் குறைவு
- கோரமண்டல் விரைவு ரயில் அதிவேகத்தில் வந்து மோதியதால் அந்த ரயிலில் பயணித்தவர்களே உயிரிழந்தனர்
இவ்வாறு அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் சிக்கி காயமின்றி உயிர் தப்பிய பலரும் விரைந்து சென்று காயமடைந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தினரும் துரிதகதியில் சென்று மீட்பு பணிக்கு உதவினர். தகவலறிந்து போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியோரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற பணியில், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, விபத்தில் பலியான 200-க்கும் அதிகமானோரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக விபத்து நிகழ்ந்த பகுதிகளிலேயே தற்போது மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.