மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை ஆகும். மக்கள் தொகை அதிகமுள்ள மும்பையில் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தானேவில் இருந்து பன்வேல் நோக்கி மின்சார ரயில் ஒன்று இரவு சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலில் தொடர்ச்சியாக ஏராளமான பயணிகள் பயணித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று 27 வயதான ஆர்ஜூ துவித்கான் என்ற பெண்ணும், குல்னாஜ் ஜூபை கான் என்ற 49 வயது பெண்ணும் பயணித்துள்ளனர். இவர்கள் இருவருடனும் இவர்களது தோழிகளும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், ரயில் கபர்கைரேனா மற்றும் நீரல் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது ஆர்ஜூவிற்கும், குல்னாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால், அவர்களுடன் இருந்த சக தோழிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சுமார் 7க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக திடீரென தாக்கிக்கொண்டதாலும், கத்தி கூச்சலிட்டதாலும் சக பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த மகளிர் போலீசார் இந்த சண்டையை கட்டுப்படுத்துவதற்காக சண்டை நடைபெற்ற ரயில் பெட்டிக்கு வந்தார். ஆனால், அந்த பெண் போலீசாரின் பேச்சையும் கேட்காமல் இவர்கள் கும்பலாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், இந்த சண்டையை தடுக்க வந்த பெண் போலீசாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதனால், அங்கிருந்த சக பெண் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனாலும், ஆர்ஜூ மற்றும் குல்னாஜ் கும்பல் மாறி, மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆர்ஜூவும், குல்னாஜூவும் ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து சரமாரியாக மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான ஆர்ஜூ மற்றும் குல்னாஜ் இருவர் மீதும் போலீசார் 353, 332 மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.