கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் தசரா ஊர்வலத்தில் கலந்து கொண்ட கும்பல் ஒன்று அங்கு அமைந்துள்ள பாரம்பரிய மிக்க மதரஸா ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அங்கு, அவர்கள் கோஷங்களை எழுப்பியதோடு மட்டும் அல்லாமல் கட்டிடத்தின் ஒரு மூலையில் பூஜையும் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஒன்பது பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நாளைக்குள் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.
1460களில் கட்டப்பட்ட பிதாரில் உள்ள மஹ்மூத் கவான் மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலிலும் இந்த பாரம்பரிய கட்டிடம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை மாலை அந்த கும்பல் மதரஸாவின் பூட்டை உடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் மதரஸாவின் படிக்கட்டுகளில் நின்று, "ஜெய் ஸ்ரீ ராம்" மற்றும் "இந்து தரம் ஜெய்" என கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், அங்கு பூஜை செய்துள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கூட்டம் படிக்கட்டுகளில் நின்று கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிப்பதைக் காணலாம்.
ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று உள்ளூர் காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் பிதாரில் இருந்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி, இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத்தை ஆளும் பாஜக அரசை தாக்கி பேசியுள்ளார். "முஸ்லிம்களை இழிவுபடுத்துவதற்காக" இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் சில பகுதிகளை வகுப்புவாத சோதனைகளுக்கான இடமாக மாற்றுவதாக சமூக ஆர்வலர்கள் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோயில்களில் நடத்தப்படும் கண்காட்சிகளில் முஸ்லிம் வர்த்தகர்களை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஹுப்பள்ளி இத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.