கடந்த 2019ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த மோடி அரசு, இந்த அரசின் கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 


எதிர்பார்ப்பை கிளப்பிய இடைக்கால பட்ஜெட்: 


ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேத்துறையை நவீனப்படுத்துவதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டிலும் இந்திய ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன அதிக வேக ரயில்களை அறிமுகப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு:


கடந்த 2023-24 பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


ரயில்வே துறைக்கு 1.6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், முதலீடுகள் மூலம் ரயில்வே துறைக்கு 2.45 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. 2023-24 ஆண்டு, பட்ஜெட்டை தாண்டி ரயில்வேத்துறைக்கு மத்திய அரசு மொத்தமாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. மொத்த முதலீடுகள் மூலம் ரயில்வேத்துறைக்கு 2.6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.


இதுகுறித்து ஐசிஆர்ஏ நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் பேசுகையில், "2024-25 ஆம் ஆண்டில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற உள்கட்டமைப்புத் துறைகளுக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். பாதுகாப்புத்துறையில் ஆராய்ச்சி மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும். 


வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. 2024-25இல் மாநிலங்களுக்கு வட்டி இன்றி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன்கள் வழங்கப்படுவது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் தொகை ரூ.1.3 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25இல், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என மொத்தமாக 10.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளது.