I.N.D.I.A கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி விலகிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.
தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்தவர். பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தவர்.
நிதிஷ் குமாரின் அரசியல் பயணம்:
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார். 2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
பரபரப்புக்கு பஞ்சாமல் இல்லாமல் இருக்கும் பிகார் அரசியல்:
தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார். இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சமீப காலமாக, நிதிஷ் குமார் செய்து வரும் செயல்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க மறுத்த சம்பவம் பேசுபொருளானது.
மறைந்த பிகார் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தார். இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜக அரசை நிதிஷ் குமார் பாராட்டி பேசினார். இதனால், அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. தொடர் அரசியல் பரபரப்புக்கு முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பாஜகவின் உதவியோடு இன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ் குமார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள், ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, பிரேம் குமார் ஆகியோரும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளாக, ஐந்து முறை கூட்டணி மாறி ஆட்சி அமைத்துள்ளார் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.