இந்திய ரயில்வே வாரியத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக, வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக தலித் அதிகாரியான சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய ரயில்வே மேலாண்மை சேவைகள் துறை (IRMS) அதிகாரியாக சதீஷ் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த ஜெய வர்மா சின்ஹா, ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு ஓய்வுபெறும் நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி சதீஷ் குமார் பதவி ஏற்க உள்ளார்.  


ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS), உறுப்பினர் சதீஷ் குமாரை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது.


 யார் இந்த சதீஷ் குமார்? (Who Is Satish Kumar?)


1986 பேட்ச் இந்திய ரயில்வே சேவை மெக்கானிக்கல் சேவை அதிகாரி சதீஷ் குமார். இந்திய ரயில்வேயில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.


சதீஷ் குமார் 1988ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் பல மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தன்னுடைய பதவிக் காலத்தில், புதுமைகளை உருவாக்குதல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் ரயில்வே அமைப்பிற்குள் முக்கியமான பாதுகாப்பு மேம்பாடுகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 2022ஆம் ஆண்டு, வட மத்திய ரயில்வேயின் பொது மேலாளராக சதீஷ் குமார் பொறுப்பேற்றார்.


கல்விப் பின்னணி


ஜெய்ப்பூரில் மாளவியா தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக். முடித்தவர் சதீஷ் குமார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் சைபர் சட்டத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தார்.


119 ஆண்டு கால வரலாற்றில் முதல் தலித் இந்திய ரயில்வே வாரியத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள, சதீஷ் குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.