10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் மெகா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இதனால், கிட்டத்தட்ட 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


12 புதிய ஸ்மார்ட் சிட்டி: இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வு மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இம்மாதிரியான சூழலில், மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.


அதன்படி, 10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆறு முக்கிய தொழில்துறை உற்பத்தி தளவாடங்கள் இருக்கும் பகுதியில் இந்த நகரங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மத்திய அரசாங்கம் 28,602 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது


பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "உத்தரகாண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் உள்ள ராஜ்புரா-பாட்டியாலா, மகாராஷ்டிராவில் உள்ள திகி, கேரளாவில் பாலக்காடு, உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பீகாரில் கயா, தெலங்கானாவில் ஜஹீராபாத், ஆந்திராவில் ஓர்வாகல் மற்றும் கோபர்த்தி, ராஜஸ்தானில் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் தொழில்துறை நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.


10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும் தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களின் வலுவான நெட்வொர்க்கை உருவாக்கும் நாட்டின் தொழில்துறை நிலப்பரப்பை மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது பெரிய அளவில் வேலை வாய்ப்பையும் வழங்கும். மொத்தமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இது மறைமுகமாக 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.


இந்தத் திட்டத்தால் சுமார் 1.52 லட்சம் கோடி முதலீடுகள் வரலாம். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடுகளை எளிதாக்குவதன் மூலம் துடிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்துறை முனைகள் 2030-க்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைவதற்கு உதவும்" என்றார்.


10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.