Rahul Gandhi: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.


அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு:


அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், வர்ஜீனியாவின் ஹெர்ன்டனில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார். அப்போது,  பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மக்களிடையே நிலவிய அச்ச உணர்வு இப்போது மறைந்துவிட்டது. அதே நேரத்தில் மோடி, 56 அங்குல மார்பு, கடவுளுடன் நேரடி தொடர்பு, அதெல்லாம் இல்லாமல் போய்விட்டது, அது இப்போது வரலாறு என்று கூறினார்.


”பாஜக பரப்பிய பலம் மாயமானது”


நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பாஜகவும் பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உட்பட பலவற்றால் பயத்தை பரப்பினர். ஆனால் அனைத்தும் சில நொடிகளில் மறைந்துவிட்டன. நிறைய திட்டமிடல் மற்றும் பணத்துடன் இந்த அச்சத்தை பரப்ப அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆனது. ஆனால்  இந்த முடிவுக்கு செல்ல அனைவருக்கும் ஒரு நொடி மட்டுமே ஆனது. இதை நீங்கள் பார்க்கலாம், நாடாளுமன்றத்தில் பார்க்கிறேன். பிரதமரை நேரில் பார்க்கிறேன், 56 அங்குல நெஞ்சு கொண்ட மோடியின் எண்ணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். கடவுளுடன் நேரடி தொடர்பு, அதெல்லாம் போய்விட்டது, அது இப்போது வரலாறு ஆகிவிட்டது” என தெரிவித்தார்.


”இந்தியாவை புரிந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ்”


ஆர்எஸ்எஸ் குறித்து பேசுகையில், “ அந்த அமைப்பு சொல்வது என்னவென்றால், சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை, சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை, சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை, சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை. நீங்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, உங்கள் அனைவருக்கும் உங்கள் வரலாறு, பாரம்பரியம், மொழி உள்ளது.  ஒவ்வொருவரும் மற்றொன்றைப் போலவே முக்கியம். ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் தமிழ், மணிப்பூரி, மராத்தி, பெங்காலி எல்லாமே தாழ்ந்த மொழிகள். அதுதான் சண்டை. அது வாக்குச் சாவடியிலோ அல்லது மக்களவையிலோ முடிவடைகிறது. ஆனால் நாம் எந்த மாதிரியான இந்தியாவைப் பெறப் போகிறோம் என்பதுதான் சண்டை. இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததுதான் இவர்களின் பிரச்னை" என ராகுல் காந்தி தெரிவித்தார்.


பாஜக மீது அட்டாக்:


தொடர்ந்து பேசுகையில், இந்தியா ஒரு ஒன்றியம், நமது அரசியலமைப்பில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியா அல்லது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்று அது ஐயமின்றி கூறுகிறது. இந்த ஒன்றியம் நமது பல்வேறு வரலாறுகள், மரபுகள், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனாலும், இந்தியா ஒரு ஒன்றியம் அல்ல, அது வேறுபட்டது என பாஜகவினர் கூறுகின்றனர்” என ராகுல் காந்தி சாடினார்.


வர்ஜீனியாவில் பேசிய பிறகு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “ தேர்தல் பரப்புரையின் போது கடவுளிடம் நேரிடையாகப் பேசுகிறேன்’ என்று மோடி சொன்னபோதுதான் தெரிந்தது அவரைப் உடைத்துவிட்டோம் என்று. உள்நாட்டில் இதை ஒரு உளவியல் வீழ்ச்சியாகப் பார்த்தோம். நரேந்திர மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த கூட்டணி உடைந்தது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.