மணிப்பூர் அருகே வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 


சூரசந்த்பூர் முகாவில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக சென்றபோது ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு  இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று தலைநகர் இம்பாலுக்கு வந்தார். இம்பால் விமான நிலையத்தில் அவரை மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் மற்றும் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகச்சந்திர சிங் ஆகியோர் வரவேற்றனர். 


பிஷ்ணுபூர் அருகே மணிப்பூர் காவல்துறையினரால் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களை அனுமதிக்கும் நிலையில் இல்லை என போலீசார் கூறுகின்றனர். சாலையின் இருபுறமும் ராகுல்காந்திக்கு கைகாட்ட மக்கள் நிற்கின்றனர். ஏன் எங்களை தடுத்தார்கள் என்பது புரியவில்லை?" என தெரிவித்தார். 


மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் Meitei மற்றும் Kuki சமூகங்களுக்கு இடையே நடந்த இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மாநிலம் முழுவதும் உள்ள 300க்கு மேற்பட்ட நிவாரண முகாம்களில் சுமார் 50,000 பேர் தங்கியுள்ளனர். மேலும், இந்த இனக்கலவரத்தில் இதுவரை 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 


கடந்த வாரம், மணிப்பூர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக, மோடி அரசை விமர்சித்த ராகுல் காந்தி, "மணிப்பூர் 50 நாட்களாக எரிகிறது, ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார், பிரதமரே இல்லாதபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன்மூலம் தெளிவாக தெரிகிறது  இந்த சந்திப்பு பிரதமருக்கு முக்கியமில்லை."என்று பதிவிட்டு இருந்தார். 


கடந்த மே 3-ம் தேதி வன்முறை வெடித்த பிறகு வடகிழக்கு மாநிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்வது இதுவே முதல் முறை.