கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் மலைப்பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா ஆகிய பழங்குடியின மக்களுக்கும், அதன் தலைநகர் இம்பாலை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கும் இடையே மே 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. அதாவது மைதேயி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என மலை வாழ் பழங்குடியினத்தவர் நடத்திய பேரணியில் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாகவே மணிப்பூர் மாநிலம் பெரும் கலவர பூமியாகவே மாறிவிட்டது. இதனால் இதுவரை 100-க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மற்றும் நாளையும் அங்கு சென்று நிலவரத்தை பற்றி தெரிந்துகொள்ளவுள்ளார்.
மேலும், அவர் மணிப்பூரில் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து சிவில் சமூக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. மே 3-ஆம் தேதி வன்முறை வெடித்த பிறகு, காங்கிரஸ் தலைவர் மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை.
இந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து தற்போது மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் சுமார் 50,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இனக்கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய தகவலாக உள்ளது.
அரசியல் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணம் குறித்து, ராகுல் காந்தி கொஞ்சம் தாமதமாக வந்தாலும், அவர் மணிப்பூருக்குச் செல்வது மிகவும் நல்ல அறிகுறி. நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக உள்ள ராகுல் மணிப்பூருக்கு வரும் போது அதிகப்படியான கவனம் பெரும். பிரதமர் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரை மணிப்பூருக்கு நேரடியாக சென்று பார்த்ததில்லை. மேலும், பிரதமர் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் இருப்பது ஏற்கனவே கேள்வியாக்கப்பட்டு வரும் நிலையில், ராகுல் இந்த பயணத்திற்குப் பின்னர், தெரிவிக்கும் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும்.
ஏற்கனவே, இந்த கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், ‘மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் பிளவு மற்றும் ஆட்சி அரசியலால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை’ என குற்றம் சாட்டியிருந்தது.
இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அங்கு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை" என திட்டவட்டமாக கூறியிருந்தார்.