காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.


இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்த இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது. 


வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்திய ஒற்றுமை நடைபயணம்:


நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம் கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லநுர்கள் கருதுகின்றனர்.


இந்நிலையில், இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு செல்லும் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் உரையாற்ற உள்ளார்.


பிரிட்டனுக்கு செல்லும் ராகுல் காந்தி:


பிரிட்டனுக்கு செல்லவிருக்கும் தகவலை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, "புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், ஜனநாயகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களுடன் உரையாட போகிறேன். நான் படித்த கல்லூரிக்கு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று உரையாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு விழாவில், "ஜம்மு காஷ்மீரில் நான் நடந்தது போல பாஜக உறுப்பினர்களால் நடக்க முடியாது. அவர்களுக்கு பயம் உள்ளது" என்றார்.


தனது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூர்ந்து பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் வலியை புரிந்துகொண்டேன் என்றார்.


"நான் யாத்திரையை எனக்காகவோ காங்கிரசுக்காகவோ மேற்கொள்ளவில்லை. நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே நோக்கம்" என்றார்.






இதையடுத்து பேசிய பிரியங்கா காந்தி, "இந்த ஐந்து மாத இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் மக்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலம் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் மீது இந்த நாட்டில் இன்னும் ஒரு பேரார்வம் உள்ளது" என்றார்.