காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமை நடைபயணம்:
எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், இயற்பியலாளரும் முன்னாள் ஐஐடி டெல்லி பேராசிரியருமான விபின் குமார் திரிபாதி, எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது.
நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம் கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
குஜராத்தை குறிவைக்கும் ராகுல் காந்தி:
இந்த நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு நடைபயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. தெற்கில் இருந்து வடக்கு வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் போல கிழக்கில் இருந்து மேற்கு வரை நடைபயணம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதை தொடர்ந்து, காங்கிரஸ், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், நடைபயணம் எப்போது தொடங்கப்படும், எங்கிருந்து தொடங்கப்படும் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைபயணம் குஜராத்தில் இருந்து தொடங்கி மேகாலயாவில் நிறைவடையும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ராகுல் காந்தி தனது நடை பயணத்தைத் தொடங்கும் போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் மகாராஷ்டிரா முழுவதும் பாதயாத்திரையைத் தொடங்கும்.
விதர்பாவில் நடக்கும் பாதயாத்திரை என் தலைமையில் நடக்கும். மேற்கு விதர்பாவில் விஜய் வடேட்டிவார் பாதயாத்திரைக்கு தலைமை தாங்குகிறார். வடக்கு மகாராஷ்டிராவில் பாலாசாகேப் தோரட் பாத யாத்திரைக்கு தலைமை தாங்குவார். மராத்வாடாவில் அசோக் சவான் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் பிருத்விராஜ் சவான், மும்பையில் வர்ஷா கெய்க்வாட் தலைமை தாங்குவார்கள். கொங்கனில் அனைத்து தலைவர்களும் சேர்ந்து பாதயாத்திரையை நிறைவு செய்வார்கள்.
பாதயாத்திரை முடிந்து பேருந்து பயணத்தை தொடங்குவோம். பேருந்து பயணத்திலும், மகாராஷ்டிரா முழுவதும் சுற்றித் திரிவோம். கூட்டம் நடத்துவோம். மக்களிடம் பேசுவோம். மத்திய, மாநில அரசின் குறைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். இது வரும் காலங்களில் மகாராஷ்டிராவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.