ஒட்டு மொத்த இந்தியாவும் தனக்கு வீடுதான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
ராகுல் காந்தி வழக்கு:
இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்களவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், எம்பிக்கு வழங்கப்படும் பங்களாவில் இருந்து வெளியேறும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் படி, டெல்லி துக்ளக் சாலையில் உள்ள பழைய பங்களாவை அவர் கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்தார். அந்த அரசு பங்களாவில்தான், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி வசித்து வருகிறார். பங்களாவில் இருந்து வெளியேறியபோது பேசிய ராகுல் காந்தி, "உண்மையைப் பேசியதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்களால் எனக்கு வழங்கப்பட்ட பங்களா அபகரிக்கப்பட்டதால் இனி அந்த வீட்டில் வாழ விரும்பவில்லை" என கூறினார்.
மீண்டும் ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களா:
இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இறுதியாக, ராகுல் காந்தி தரப்பு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, "ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நல்ல ரசனையில் இல்லை. பொது வாழ்வில் இருப்பவர், மக்கள் முன்பு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்தது.
நான்கு மாத சட்ட போராடத்திற்கு பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவரின் டெல்லி பங்களா மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி, "முழு இந்தியாவும் எனக்கு வீடுதான்" என தெரிவித்துள்ளார்.