ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில்தான், நூ மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது.


நாட்டை உலுக்கிய நூஹ் கலவரம்:


மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கைமீறி சென்றிராத வகையில், இன்று வரை இணையம் முடக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 202 பேரை அம்மாநில  போலீசார் கைது செய்துள்ளனர். 


மணிப்பூரை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாதிரியான சூழலில், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, பலரின் வீடுகளை மாநகராட்சி இடித்து வருகிறது. இந்த வீடுகளில் இருந்து கொண்டுதான், மத ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கலவரக்காரர்கள் கல் வீச்சை நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் குற்றஞ்சாட்டி வருகிறது.


இஸ்லாமியர்களை குறிவைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களின் வீடுகளை, அவருக்கு சொந்தமான கடைகளை இடித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.


மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய இஸ்லாமியர்:


ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் இந்து மதத்தை சேர்ந்த மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய இஸ்லாமியர் ஒருவரின் வீடி இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினத்தன்று, ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தர் போகத் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், நூஹ் மாவட்டம் வழியாக சென்றுள்ளனர்.


ஒப்பந்ததாரர்களான ரவீந்தர் போகத்தும் அவரது நண்பர்களும், பத்காலிக்கு சென்றுவிட்டு, நூஹ் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, இரவு 1 மணி அளவில் ஜாண்டா பூங்கே அருகே அவர்கள் மீது கலவரக்காரர்கள், கல்வீச்சை நடத்தியுள்ளனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், அவர்களை காப்பாற்றி, தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் இஸ்லாமியரான அனிஷ்.


தொடரும் புல்டோசர் அரசியல்:


அவர்களை பாதுகாத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றது மட்டும் இன்றி, அவர்களுக்கு உணவை அளித்து, ஆறுதல் கூறியுள்ளார் அனிஷ். கலவரம் ஓய்ந்த பிறகு, ரவீந்தர் போகத்தையும் அவரது நண்பர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டுள்ளார்.


இந்த சம்பவம் நடந்த 6 நாள்களில் அனிஷின் வீட்டை, மாநகராட்சி நிர்வாகம் புல்டோசரை கொண்டு இடித்து தள்ளியுள்ளது. தன்னுடைய உயிரை காப்பாற்றிய அனிஷின் வீட்டை இடிப்பதில் இருந்து தடுத்து நிறுத்த ரவீந்தர் போகத்தும் முயற்சி செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். ஆனால், ரவீந்தர் போகத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. 


குற்றத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படியே தண்டனை வழங்க வேண்டும். ஆனால், உள்ளாட்சி நிர்வாகம் காவல்துறையும் சட்டத்தை கையில் எடுத்து அவர்களின் வீடுகளை இடிப்பது என்பது ஆபத்தான போக்கு என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.