அனைத்து இந்துக்களுக்கும் பாஜக ஒன்றும் பிரதிநிதி அல்ல என்றும் தங்களை தாங்களே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாவதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அதிரடியாக பேசியுள்ளார். அரசியல் சாசனம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவை குறித்து பேசி நாடாளுமன்றத்தில் அனல் பறக்க வைத்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்: பாஜக எம்.பி.க்களின் கடும் அமளிக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "அரசியல் சாசனம் பற்றி பாஜக அடிக்கடி பேசுவது நன்றாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜகவின் கருத்தை எதிர்ப்பவர்கள் மீதும் இந்தியா என்ற கருத்தாக்கம் மீதும் முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது" என்றார்.


சிவன், சீக்கிய மதத்தின் நிறுவனரான குருநானக் ஆகியோரின் படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி, "பயத்தை எதிர்கொள்வதும் ஒருபோதும் பயப்படக்கூடாது என்ற எண்ணமும் சிவனிடம் இருந்து வருகிறது. சிவன் தனது கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்தில் மரணத்தை வைத்திருக்கிறார்.


உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு பிரதிபலிக்கிறது. ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதை குறிக்கிறது. அந்த உணர்வோடுதான் நாங்கள் போராடினோம். சிவனின் இடது தோளுக்குப் பின்னால் திரிசூலம் வைக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி vs எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: இது வன்முறையின் சின்னம் அல்ல. அகிம்சையின் சின்னம். சிவபெருமான், பாபா குரு நானக் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் நாட்டை வடிவமைத்த நம்பிக்கைகள் ஆகும். இவை அகிம்சையை ஆதரிக்கின்றன. ஆனால், அச்சப்படக் கூடாது என போதிக்கிறது. 


ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே அல்ல. பாஜகவுடன் போரிட்டபோது கூட, ​​நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங்கள் உண்மையைப் பாதுகாத்தபோது கூட ​​எங்களிடம் ஒரு துளி வன்முறை வெளிப்படவில்லை" என்றார்.


மகாத்மா காந்தி குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகாத்மா காந்தி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய கூற்றுகள், பிரதமரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. மகாத்மா காந்தி இறந்துவிட்டார். அவர் ஒரு திரைப்படத்தின் மூலம் உயிர்த்தெழுந்தார் என்று பிரதமர் கூறுகிறார். அவரது அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறதா?" என்றார்.


ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, "முழு இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது கவலை அளிக்கிறது" என்றார்.


இதற்கு பதிலடி அளித்த ராகுல் காந்தி, "மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோர் மட்டுமே இந்துக்கள் அல்ல. அவர்களுக்கு எதிராக மட்டுமே நான் கருத்து கூறினேன்" என்றார்.