Mumbai: வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரில், இருவர் உயிர் தப்பிய நிலையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்:


மும்பை அருகே உள்ள லோனாவாலாவில் பொங்கி எழும் நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மட்டுமே நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர். 5 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பேரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு,  ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் விடுமுறை கொண்டாட்டத்திற்காக சென்றிருந்த நிலையில் இந்த எதிர்பாராத சோகம் அரங்கேறியுள்ளது.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்:


மழைக்காலங்களில் இந்த மலை நகரத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைப் போலவே, அந்த குடும்பமும் பூசி அணையின் உப்பங்கழிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்பகுதியில் அதிகாலை முதல் பெய்த கனமழையால் அணை நிரம்பியதால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் தொடர்பான வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராப்சோடிக் நீர்வீழ்ச்சியின் நடுவில் ஒரு பாறையில் சிக்கியவர்கள், ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அலைக்கு எதிராக போராடி உயிர் பிழைக்க முயன்று கொண்டிருந்தனர்.






வெள்ளம் நொடிக்கு நொடி அதிகரிக்க அலறல் சத்தத்திற்கு மத்தியில் அவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டனர்.  இதனிடையே, அங்கு திரண்ட பொதுமக்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன. 


வெள்ளத்தில் சிக்கியது எப்படி?


உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறுகள் மற்றும் மலையேற்ற கருவிகளுடன் உயிர் பிழைத்தவர்களை தேடத் தொடங்கினர். அதன் முடிவில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தாங்கள் நின்றிருந்த பாசி படிந்த கற்பாறைகள், வழுக்கியதில் அவர்கள் வெள்ளத்தில் சிக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  நீரின் வேகத்தால் அவர்கள்  அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நீர்வீழ்ச்சி மற்றும் பூசி அணையின் கீழ் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.