இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தியதாக ஏராளமான முறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார். இந்நிலையில், தற்போது, ரஷ்யாவிடம் இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதையடுத்து, மோடி ட்ரம்ப்பிற்கு பயப்படுவதாகவும், அப்படி கூறுவதற்கான ஆதாரங்களையும் அடுக்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவரது பதிவின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ராகுலின் பதிவு என்ன.?
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி ட்ரம்ப்பை கண்டு அஞ்சுகிறார் என குறிப்பிட்டு, அதற்கு கீழ், அப்படி கூறுவதற்கான 5 காரணங்களையும் தெரிவித்துள்ளார்.
அதில் முதலாவதாக, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது என ட்ரம்ப்பே முடிவு செய்து அறிவிப்பு வெளியிட மோடி அனுமதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக, பலமுறை அவமதிக்கப்பட்ட பின்னரும், ட்ரம்ப்பிற்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை மோடி அனுப்பிக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மூன்றாவதாக, நிதியமைச்சரின் அமெரிக்க பயணத்தை ரத்து செய்ததை குறிப்பிட்டுள்ளார்.
நான்காவதாக, எகிப்தில் நடைபெற்ற ஷர்ம் எல்-ஷேக் மாநாடு, அதாவது காசா அமைதி மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட போதிலும், அங்கு செல்வதை மோடி தவித்ததை குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாவதாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்த ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு மோடி முரண்படாமல் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் கூற்றுக்கள் என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை தான் தான் பேசி தடுத்து நிறுத்தியதாக இதுவரை ஏராளமான முறை தெரிவித்துவிட்டார். இந்திய தரப்பில் அதற்கு பல முறை மறுப்பு தெரிவித்த போதிலும், நேற்று வரை ட்ரம்ப் அதையே கூறி வருகிறார். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான நிலையில், இந்த போருடன் சேர்த்து 8 போர்களை நிறுத்தியுள்ளதாக(அதில் இந்தியா-பாகிஸ்தான் அடங்கும்) கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி இன்னும் எந்த பதிலும் அளிக்காத நிலையில், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.