சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார். இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை 17-ந்தேதி திறக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமையன்று) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
கோவிலில் நாளை மறுநாள் சனிக்கிழமை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
பின்னர் மறுநாள் 22-ந் தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.