பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி-யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது பாஜக“
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று விமர்சித்தார். பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாகவும், மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஜோடிக்கப்படுவதாகவும், தேர்தல்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் விவரங்களை பகிர தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், நாட்டின் நலனுக்க எதிரான குற்றச் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தரவுகளுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி
இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, பல தரவுகளுடன் பேசினார் ராகுல் காந்தி. அவரது தரவுகளின்படி, ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளதாகவும், கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில், சுமார் 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் வவிரங்களை நாங்கள் ஆய்வு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில், 25 தொகுதிகளில் வெறும் 33,000 வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதேபோல், பல்வேறு தொகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது என தரவுகளை வைத்து விளாசியுள்ளார் ராகுல்.
மேலும், அவரது தரவுகளின்படி, முதன் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18-20 வயது உடையவர்கள் இல்லை என்றும், 80 வயது நபர் ஒருவர் முதல் முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருவதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல், ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு தொழிற்சாலையில் பல வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,009 பேர் இல்லை என்றும், ஒரே வாக்காளரின் பெயர் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை எனவும், பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும், அடையாளம் காணும்படி இல்லை எனவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.
ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இப்படியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையிலான தரவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.