PM Modi On USA Tariff: பிரதமர் மோடியின் பேச்சு, வரி விதிப்புகளை கொண்டு மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கான மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது,
சமரசமே கிடையாது - மோடி
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கை, இன்று முதல் இந்திய பொருட்களின் மீது அமலுக்கு வந்துள்ளது. கூடுதல் வரியானது வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தான் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில், மத்திய அரசு எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சில விலைகளை நாங்கள் கொடுக்க வேண்டியிருந்தாலும், விவசாயிகளுகாக நாங்கள் அதையும் செய்ய தயார் என உறுதிபட பேசியுள்ளார்.
வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி?
டெல்லியில் நடைபெற்ற இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகளின் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்தியா அதன் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களின் நலன்களுடன் ஒருபோதும் சமரசம் செய்யாது. இதற்காக நான் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலனுக்காக இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை உறுதி
இந்தியா அமெரிக்காவிற்கு பல்வேறு வகையான விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் ட்ரம்ப் அறிவித்துள்ள 50 சதவிகித வரிச்சுமையால் பாதிக்கப்படும் துறைகளில் விவசாயமும் பிரதானமாக உள்ளது. பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதே கூடுதல் வரிக்கு காரணம் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால், சந்தை சூழலின் அடிப்படையில் 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதனை காரணமாக குறிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது நியாயமற்றது என வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் உள்நோக்கம் என்ன?
இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டதை போன்றே அமெரிக்காவுடனும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அப்போது, தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்கள் மற்றும் அசைவ பாலை இந்திய சந்தைக்கு கொண்டு வர அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் நஷ்டமடைவதோடு, மத உணவுர்வுகளும் பாதிக்கப்படும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாகவே இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாதியிலேயே நின்றுள்ளது. ட்ரம்பும் இந்தியா மீது கூடுதல் வரி விதித்து அழுத்தம் கொடுத்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.