பாஜக தலைமையிலான மத்திய அரசு எதற்குமே பொறுப்பேற்காமல் பிறரை மட்டுமே காரணம் காட்டுவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ராகுல் காந்தி சாடல்:
அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். யதார்தத்தை ஏற்காத மத்திய அரசு சாக்குப்போக்குகளை கூறுவதையே சித்தாந்தமாக கொண்டுள்ளதாக ராகுல் காந்தி சாடினார்.
”மாற்றி விடும் பாஜக”
”தங்களது தவறுக்கு பொறுப்பேற்கும் வழக்கம் பாஜகவிற்கு கிடையாது. கேள்வி கேட்டால் தவறுக்கான பொறுப்பை வேறு ஒருவர் மீது மாற்றி விடுவர்கள். ஒடிசா ரயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என கேட்டு பாருங்களேன், காங்கிரஸ் தான் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக செய்ததாக பாஜகவினர் பேசுவர். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அனைத்திற்கும் கடந்த காலத்தையே காரணமாக கூறுகின்றனர். தற்போது நடக்கும் தவறுகளுக்கு யார் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் விபத்து நிகழ்ந்தது எனது நினைவில் உள்ளது. அப்போது, ரயில் விபத்திற்கு முன்பு இருந்த பிரிட்டிஷ் ஆட்சி தான் காரணம் என காங்கிரஸ் கூறவில்லை. ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர், விபத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், தற்போது உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக அதற்கான காரணங்களை மடைமாற்றும் பிரச்னை தான் இந்தியாவில் நிலவுகிறது” என ராகுல் காந்தி பேசினார். ஏற்கனவே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என, ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களை பாராட்டினார்:
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மாடர்ன் இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மகாத்மா காந்தி ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியாவிற்கான சுதந்திர போராட்டம் தென்னாப்ரிக்காவில் தொடங்கியது. நேரு, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஷ் உள்ளிட்ட அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான், அவர்கள் வெளி உலகம் தொடர்பாக சுதந்திர எண்ணங்களை கொண்டிருந்தனர்” என குறிப்பிட்டார்.