கடந்த 2019ஆம் ஆண்டு, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கின் காரணமாக எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர் சட்ட போராட்டத்தின் விளைவாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அவருக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டது.


"வனவாசி என்ற சொல்லை ஏற்க மாட்டேன்"


நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்ட பிறகு, முதல்முறையாக தனது தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். அப்போது,  என்றும் இந்தியாவின் உண்மையான சொந்தக்காரர்களே பழங்குடியினர் என்பதை அந்த சொல் மறுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நீங்கள் (பழங்குடியினர்) கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஒரு இடத்திற்குள் அடைக்கப்பட கூடாது. முழு கிரகமும் உங்களுக்காக திறந்திருக்க வேண்டும். இது ஒரு கருத்து, மற்றொரு கருத்து என்னவென்றால் 'வனவாசி' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பானது. 


நாங்கள் ஆதிவாசி என்கிறோம், அவர்கள் வனவாசி என்கிறார்கள். மேலும் 'வனவாசி' என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு விபரீத தர்க்கம் இருக்கிறது. 'வனவாசி' என்ற சொல் நீங்கள் இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் என்பதை மறுத்து, அது உங்களைக் காட்டிற்குள் அடைக்கிறது. 


"வயநாடே எனது குடும்பம்தான்"


'வனவாசி' என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், நீங்கள் காட்டில் உள்ளவர்கள். நீங்கள் ஒருபோதும் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை, எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த வார்த்தையை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றார்.


பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து பேசிய அவர், "நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் இந்த நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள். இந்த நாட்டின் அசல் உரிமையாளர்களுக்கு நிலம், காடு மற்றும் அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.


வயநாடுக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுடன் எனக்கும் ஒரு உறவு இருக்கிறது. நிச்சயமாக, எங்களுக்கு இடதுசாரிகளுடன் கருத்தியல் வேறுபாடு உள்ளது. ஆனால், நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, ​​ஒட்டுமொத்த வயநாடு என்னை ஆதரித்தது. வயநாடு எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன்" என்றார்.


ராஜஸ்தானில் பழங்குடி மக்களை சந்தித்து பேசியதை பகிர்ந்து கொண்ட அவர், "சில நாட்களுக்கு முன்பு, நான் ராஜஸ்தானில் ஒரு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு நான் பழங்குடி சமூகத்துடன் பேசினேன். ஆதிவாசி என்றால் ஞானம் கொண்டவர்கள், பூமியைப் பற்றிய புரிதல் கொண்டவர்கள், நாம் வாழும் கிரகத்துடனான உறவை கொண்டவர்கள். நமது பழங்குடி சகோதர சகோதரிகளே இந்த நாட்டின் அசல் உரிமையாளர்கள்" என்றார்.