உலக வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதில் சிலதுதான் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரலாற்று நிகழ்வாக பதிவாகியிருக்கிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உலகின் மகத்தான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வரும் 15ஆம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்து, 77ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 


77ஆவது சுதந்திர தினம்:


இதை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. வழக்கமாக, சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் உரையாற்றுவார். அந்த வகையில், இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


அரசு நிர்வாகத்தில் பொது மக்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக நிர்வகிக்கப்படும் கிராமங்களின் தலைவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா ஆகியவற்றின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல, மத்திய விஸ்டா திட்டத்தின் ஷ்ரம் யோகிகள் (கட்டுமானத் தொழிலாளர்கள்), காதி தொழிலாளர்கள், நாட்டின் எல்லையில் சாலைகளை அமைப்பதில் ஈடுபட்டவர்கள், அம்ரித் சரோவர் மற்றும் ஹர் கர் ஜல் யோஜனா மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அரசின் மெகா பிளான்:


நாட்டின் தலைநகரான டெல்லியில் செல்ஃபி எடுப்பதற்கு என 12 சிறப்பு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்றவர்கள், இங்கு செல்ஃபி எடுத்து பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், "சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-20 வரை MyGov போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டி நடத்தப்படும். 


போட்டியில் பங்கேற்க விரும்புவோர், செல்ஃபி எடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு ஸ்பாட்டுகளில் ஏதனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பாட்டுகளுக்கு சென்று செல்ஃபி எடுக்கவும், அவற்றை MyGov தளத்தில் பதிவேற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பன்னிரண்டு வெற்றியாளர்கள், ஒவ்வொரு ஸ்பாட்டிலும் இருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தலா 10,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.


பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மேஜர் நிகிதா நாயர் மற்றும் மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்கள். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் மார்க்-III துருவ் என்ற இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தில் மலர் இதழ்களை தூவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கின்  முகப்பு படத்தில் (DP) தேசிய கொடியை வைத்து, நாட்டு மக்கள் அனைவரும் அதையே பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.