'மக்களின் ஜனாதிபதி' என அன்போடு அழைக்கப்படுபவர் முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில், நாட்டின் குடியரசு தலைவராக பதவி வகித்தார். விஞ்ஞான உலகில் அவர் ஆற்றி பங்கு மகத்தானவையாக கருதப்படுகிறது. இதனால்தான், அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என நினைவுகூரப்படுகிறார்.
கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த அப்துல் கலாம்:
அதை தாண்டி அவரது எளிமை, கண்ணியம் ஆகியவை மக்கள் மத்தியில் இன்றளவும் அவரை நினைவுப்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான், ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.வி. ராவ் பகிர்ந்துள்ளார். யாரிடமும் பரிசு பொருள்களை ஏற்காத அப்துல் கலாமின் இயல்பை குறித்து ராவ் விவரித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான X-இல் (ட்விட்டர்) அவர் குறிப்பிடுகையில், "அப்துல் கலாமுக்கு பரிசாக வழங்கப்பட்ட கிரைண்டரை ஏற்க மறுத்து, அந்த கருவிக்கு பணம் பெற்ற கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 2014 ஆம் ஆண்டு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு 'சௌபாக்யா வெட் கிரைண்டர்' என்ற நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது.
நிகழ்ச்சியில், ஸ்பான்சர் சார்பாக அவருக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டது. அதை அவர் மரியாதையுடன் ஏற்க மறுத்துவிட்டார். ஸ்பான்சர் அது வெறும் கிரைண்டர் என்று விளக்கி, ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வேறு எந்த வாக்குவாதமும் இல்லாமல் பரிசை எடுத்துக் கொண்டார். அடுத்த நாள், கிரைண்டரின் விலையைக் கண்டுபிடிக்க அப்துல் கலாம், தன்னுடைய உதவியாளரை ஷாப்புக்கு அனுப்பினார்.
பரிசு பொருளை கூட ஏற்காத இயல்பு:
பின்னர், தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து கிரைண்டரின் விலையை சரிபார்த்து நிறுவனத்திற்கு அனுப்பினார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி காசோலையை டெபாசிட் செய்ய வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்தது.
கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் தனது வங்கி கணக்கை சரி பார்த்துள்ளார். அந்த பணத்தை கிரைண்டர் நிறுவனம் டெபாசிட் செய்யாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, காசோலையை டெபாசிட் செய்யும்படி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இல்லையெனில், கிரைண்டரை திருப்பி அனுப்பிவிடுவேன் என சொல்லியுள்ளார்.
அவரது வைராக்கியத்தை பார்த்து, நிறுவனம் அந்த காசோலையை டெபாசிட் செய்தது. ஆனால், அதற்கு முன்பு, காசோலையை புகைப்படமாக எடுத்து, அதன் நகலை காட்சிக்கு வைத்துள்ளனர்" என பதவிட்டுள்ளார்.
மேலும் பதிவிட்ட அவர், "அப்துல் கலாம் தனது குழந்தைப் பருவத்தில் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு வாழ்நாள் பாடம் இது: "ஒவ்வொரு பரிசுக்குப் பின்னும் ஏதோவொரு சுயநலக் காரணம் இருக்கிறது. கைமாறு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நீங்கள் எந்தப் பரிசை ஏற்கும் முன், அதைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்" என அப்துல் கலாம் தனது சுயசரிதை நூலில் எழுதியிருப்பார். அவரின் சுயசரிதையை அனைத்து இந்தியர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்" என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராவ் குறிப்பிட்டுள்ளார்.