Rahul Gandhi : உண்மையை பேசுவதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார்.. அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி..

டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைத்துள்ளார் ராகுல் காந்தி.

Continues below advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

Continues below advertisement

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

"உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயார்"

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு அவருக்கு அவகாசம் அளித்தது. 

ஆனால், தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைத்துள்ளார் ராகுல் காந்தி. அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துஸ்தானை சேர்ந்த மக்கள் 19 ஆண்டுகளாக இந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள்.

அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "எனது சகோதரன் சொன்னது அனைத்தும் உண்மை. அரசை பற்றி பேசியதால் தற்போது அவர் கஷ்டப்படுகிறார். ஆனால், நாங்கள் பயப்படவில்லை" என்றார்.

"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை"

"இந்த வீட்டை இப்போது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மோடி அரசும் அமித் ஷாவும் ராகுல் காந்தியை குறிவைக்கும் விதம் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்" என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து, பாட்னா நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

மோடியின் பெயர் தொடர்பான அதே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தற்போது, அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் நீதிபதி சந்தீப் குமார் முன் குறிப்பிடப்பட்டது. ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை ஏப்ரல் 24ஆம் தேதி விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்.

Continues below advertisement