மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில் ‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தை’ மேற்கொள்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். தற்போது, அந்த நடை பயணத்தை ராகுல் காந்தி வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.


கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம்  காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. இந்த பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


வெகுஜன மக்களுடன் உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது, அவர்களின் பணியை அவர்களுடன் இணைந்து செய்வது என பல வகையில் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ்நாட்டில் தொடங்கி கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவை தாண்டி தற்போது நடைபயணம் மகாராஷ்டிராவை எட்டியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.






"இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாகனங்களில் பயணிப்பதில்லை. சாலையில் நடந்து செல்கின்றனர். விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அல்லது வாகனங்களில் செல்வதன் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தியா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் சாலைகளில் நடக்க வேண்டும்.


குஜராத்தில் தேர்தல் இருப்பதால், மகாராஷ்டிராவில் இருந்து ஏர்பஸ் திட்டம் போனது போல் உங்கள் திட்டங்கள் குஜராத்திற்கு செல்கிறது. ஃபாக்ஸ்கான் திட்டம் கூட குஜராத்திற்கு சென்றுள்ளது. பணத்தைத் தவிர, மாநில இளைஞர்களின் வேலைகள் மற்றும் எதிர்காலமும் பறிக்கப்படுகிறது" என்றார்.


முன்னதாக, இந்தியா முழுவதும் புகழ்பெற்ற கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பின்னணி இசை இந்திய ஒற்றுமை பயணத்தின் சமூக வலைதள வீடியோக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடா யாத்திரையின் ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த நடைபயணத்திற்கு பெரும் மக்கள் ஆதரவு கிடைத்திருப்பதால், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளது. பின்னணி இசையாக கே.ஜி.எஃப் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து இசை நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.