பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததையடுத்து, அக்டோபர் 31 அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


பாஜக மூத்த தலைவர்களை விடுதலை செய்த லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அயோத்தியைச் சேர்ந்த ஹஜி மஹ்பூப் அகமது மற்றும் சையத் அக்லக் அகமது ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை, நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா ​​மற்றும் சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.


பாபர் மசூதி இடிப்பில் சதி இருப்பதை நிறுவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை, எதிர்த்து இரண்டு மனுதாரர்களும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.


தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் வரலாற்று வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்ததற்கான சாட்சியங்கள் என்றும் மேல்முறையீட்டு மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தீ வைப்பு, கொள்ளை போன்றவற்றால் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


மேல்முறையீட்டுக்கு மாநில அரசும், சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்தன. இரண்டு மேல்முறையீட்டு மனுதாரர்களும் இந்த வழக்கில் புகார்தாரர்களும் அல்ல பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எனவே, அவர்கள் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்நியராக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் எதிர்தரப்பு தெரிவித்திருந்தது.


கடந்த 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாஜகவின் ராம ஜென்மபூமி இயக்கத்தின் கீழ் அணிதிரட்டப்பட்ட 'கரசேவகர்களால்' இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ஒரு பழமையான ராமர் கோயில் இருந்ததாக 'கர சேவகர்கள்' கூறினர்.


2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தை தெய்வமான ராம் லல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30, 2020 அன்று, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. செய்தித்தாளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை ஆதாரமாக நம்ப வழக்கின் நீதிபதி மறுத்துவிட்டார்.