காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒருமைப்பாட்டு பயணத்தில் சென்றுகொண்டே அளித்த பேட்டியில், தனது வருங்கால மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
இந்திய ஒருமைப்பாட்டு பயணம்
பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியை அடைந்து, வடக்கில் மீதமுள்ள யாத்திரையை முடிக்க ஜனவரி 3 ஆம் தேதி காஷ்மீர் கேட்டில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதல் குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 9-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி குறித்து
எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் பயணத்தில் சளைக்காமல் சென்றுகொண்டே இருக்கும் ராகுல் காந்தி நடந்துகொண்டே ஒரு பேட்டியை அளித்தது வைரலானது. அதில் தனது பாட்டி இந்திரா காந்தியைப் பற்றி உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார். "இந்திரா காந்தி என் வாழ்க்கையின் முக்கியம் வாய்ந்த நபர். எனது இரண்டாவது தாய் அவர்", என்று மும்பையில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது எடுக்கப்பட்ட பேட்டியில் ராகுல் காந்தி கூறினார்.
மனைவி எப்படி இருக்க வேண்டும்
அப்போது நெறியாளர், "இந்திரா காந்தியின் குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்புவீர்களா?",என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. குணநலன்கள் குறித்த எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால், என் அம்மா மற்றும் பாட்டியின் குணங்கள் கலவையாக இருப்பது நல்லது" என்று ராகுல் காந்தி கூறினார்.
எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்
அவரை பாஜகவினர் அழைக்கும் பெயர்கள் குறித்து பேசுகையில், "என்னை எப்படி அழைத்தாலும் அதனை நான் வரவேற்கிறேன், நான் நன்றாகவே உணர்கிறேன், தயவு செய்து என்னை அழைத்துக்கொண்டே இருங்கள். எனக்கு கவலையில்லை, நீங்கள் என்ன வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். நான் அதை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எனது பாட்டியை (இந்திரா காந்தி) இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர் குங்கி குடியா என்று அழைக்கப்பட்டார். 24 மணி நேரமும் என்னை தாக்கும் அதே நபர்கள் அவரை குங்கி குடியா என்று அழைத்தார்கள். பின்னர் குங்கி குடியா இரும்பு பெண்மணி ஆனார். அவர்கள் அழைக்காமல் இருந்த காலத்தில் அவர் இரும்பு பெண்மணியாக இல்லாமல் இல்லை. அவர் எப்போதும் இரும்பு பெண்மணியாகவே இருந்தார்" என்றார். குங்கி குடியா என்றால் 'ஊமை பொம்மை' என்று பொருள். அமைதியான பொம்மையாக அவர் இருப்பதாக அந்த நேரத்தில் எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.