சத்தியாகிரக முறையில் நாட்டின் எளிமையான விவசாய சமூகங்கள், அதிகாரத்துவத்தின் இறுமாப்பை தலைகுனிய வைத்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.   


முன்னதாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, " இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார். 


இதுகுறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், " சத்தியாகிரக முறையில் நாட்டின் எளிமையான விவசாய சமூகங்கள், அதிகாரத்துவத்தின் இறுமாப்பை தலைகுனிய வைத்துள்ளனர். அநீதிக்கு எதிரான உங்களது இந்த வெற்றியை பாராட்டுகிறேன். ஜெய் கிசான் " என்று பதிவிட்டுள்ளார்.       


 






 


மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை கட்டாயம் திரும்பப்பெறும், திரும்பப் பெறும் சூழலுக்கு அரசு செல்லும். எனது இந்த வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! என்ற தனது முந்தைய வீடியோவை மேற்கோள் காட்டி இந்த கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது . 






 


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகிய மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களை கடந்தண்டு செப்டம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 


நாடாளுமன்றத்தில் இந்த மூன்று மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே பல்வேறு பிரச்சனைகள் நிலவின. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பெரும்பான்மை பலத்துடன் இந்த மசோதா நிரைவேற்றப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மசோதாவை ஆதரித்துப் பேசினார்


மாநிலங்களைவையில், துணை அவைத்தலைவர் நாடாளுமன்ற விதிமுறைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு மூன்று வேளாண் சட்டங்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினர். இதற்கு, அனைத்து வகையான எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை, அவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். 


ராகுல் காந்தி ட்ராக்டர் பேரணி:  


மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெகுஜனப்  போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி.




விவாசாய கூட்டமைப்பு பிரதிநிதிகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மூன்று  நாள் டிராக்டர் பேரணியைத் தொடங்கினார்.






 


2021, ஜூலை மாதம் நடுவில் நாடாளுமன்றம் அருகே டிராக்டர் பேரணி நடத்தி வேளாண் சட்டத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 2021 அக்டோபர் 3-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவாசாயிகள் மீதி  மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றிய காட்சிகள் காண்போரை நிலை குலைய வைத்தது. இந்த துயர சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.