நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு உரையாற்றுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக் தேவ், பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மகோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதனையடுத்து, பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் திறந்து வைக்கும் திட்டங்கள்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் ரூ 6250 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பதற்கான குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக பிரதமர் இன்று மகோபாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் அந்தப் பிராந்தியத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவும் விவசாயிகள் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவியாக அமையும். அர்ஜுன் சகாயக் திட்டம், ரடோலி வையர் திட்டம், போவானி அணைக்கட்டு திட்டம் மற்றும் மஜ்கோவன்-சில்லி நீர்த்தெளிப்பான் திட்டம் ஆகியன தொடங்கி வைக்கப்படவுள்ள திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவு ரூ. 3,250 கோடிக்கும் அதிகமாகும். இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மகோபா, ஹமீர்பூர், பாண்டா மற்றும் லலித்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பிலான நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர். மேலும் இந்தத் திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும்.
மாலை 5.15 மணி அளவில் பிரதமர் ஜான்சியின் கரௌவ்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 600 மெகாவாட் அல்ட்ரா மெகா சூரிய மின்சக்தி பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது ரூ 3,000 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் குறைந்த செலவில் மின்சாரம் கிடைத்தல் மற்றும் மின்சார விநியோக அமைப்பில் நிலைத்தன்மையை உருவாக்கல் என்ற இரட்டைப் பலன்களை வழங்கும்.
பிரதமர் ஜான்சியில் அடல் ஏக்தா பூங்காவையும் தொடங்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் பூங்காவானது ரூ 11 கோடிக்கும் அதிகமான செலவில் சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்தப் பூங்காவில் ஒரு நூலகமும் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் சிலையும் நிறுவப்படவுள்ளது. ஒற்றுமைக்கான சிலையை வடிப்பதில் பங்கேற்றிருந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி காலை ஒன்பது மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்க அமைப்புகள் ஓர் ஆண்டு காலமாக போராடி வருகிறனர். எனவே, குரு நானக் தேவ் பிறந்தநாளில் பிரதமர் மோடி உரையாற்றுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்