ஜம்மு & காஷ்மீர்:  தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு,ஹைதர்போரா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் குடும்பத்தினரிடம்  ஒப்படைத்தது. 


 






 


கடந்த 15ம் தேதி ஹைதர்போரா பகுதியில் செயல்படும் கால் சென்டர் ஒன்றில் நான்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய ராணுவத்தினர்  நடத்திய  ரகசிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணமடைந்தனர். இதில், படுகொலை செய்யப்பட்ட அல்தாஃப் அகமது பட், டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, ஹைதர் (அ) பிலால் பாய் ஆகிய நால்வரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காமால் ஹைதர்போரா இருந்து 70 மைல் தொலைவில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்தவாரா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டனர்.  






இந்நிலையில், உயிரிழந்த நால்வரில், டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, தொழில் நிறுவனர் அல்தாஃப் அகமது பட் ஆகிய மூவருக்கும்  தீவிரவாத குழுவினருக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனியார் கட்டிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டதாகவும், இந்திய ராணவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர். மேலும்,  தங்கள் சொந்த மரபுபடி  இறுதி மரியாதை செய்ய வேண்டி, உடல்களை திரும்ப தர வேண்டும் என்று வேதனையுடன் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.  










தொழில் நிறுவனர் அல்தாஃப் அகமது பட், மருத்துவர் முதாசீர் குல் ஆகிய இரண்டு பேரின் சடலங்களை ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் தோண்டி எடுக்க முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இவர்கள் இருவரும் தீவிரவாத குழுக்களுக்கு உதவி புரிந்துவந்ததாக குற்றம் சாட்டியிருந்தது. 






 


“அல்தாஃப் அகமது மற்றும் முதாசிர் குல் ஆகியோரின் சடலங்கள் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்படுவதற்காக ஹந்த்வாராவில் தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துரிதமாக நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக முதல் படி இதுவாகும்” என்று ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மாட்டு ட்வீட் செய்துள்ளார்.  


 


 


இதில் கொல்லப்பட்ட மற்றொரு நபரான அமீர் மேக்ரே உடலும் தோண்டி எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல் சக்தி துறையில் உதவி லைன்மேனாக பணிபுரியும் அமீர் மேக்ரேவின் தந்தை  அப்துல் லத்திப் மேக்ரே எல்லையோர தீவிரவாதிப் பணிக்கு எதிரான நடவடிக்கையில் செய்த நற்பணிக்காக  வீர்தீர விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.     


      முன்னதாக, இக்குற்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.





இதுகுறித்து அவர் விடுத்துள்ள  ட்விட்டர் பதிவில், "ஹைதர்போரா விவகாரம் தொடர்பாக கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate) அலுவலர் விசராணை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. உரிய நேரத்தில் சமர்பிக்கப்படும் அறிக்கை அடிப்படையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கை பாதுகாக்க ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.