கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிபோட்டது. பிரதமர் மோடி குறித்து அவர் அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்தது.


இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்த ராகுல் காந்தி:


எங்கு பேசியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே இடத்தில் இருந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரையை இன்று கோலாரில் இருந்து தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி.


தேர்தல் பிரச்சாரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்த ராகுல் காந்தி, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இந்திய மக்கள் பற்றி பேசும்போது, ​​மிகப்பெரிய கேள்வி என்ன? எந்தப் பிரிவினர் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர் என்பதே மிகப்பெரிய கேள்வி. அரசாங்கத்தில் உள்ள செயலாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், ஓபிசி, ஆதிவாசிகள் மற்றும் தலித்துகள் 7 சதவீதம் மட்டுமே. 


அரசியல் பிரதிநிதித்துவம்:


சொத்துப் பங்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுவதற்கு முன் நாட்டில் ஓபிசி, ஆதிவாசிகள், தலித்துகளின் மக்கள் தொகை என்ன என்பதுதான் கேள்வி.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2011இல் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடங்கியது. நீங்கள் அனைவரையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்பினால், ஒவ்வொரு பிரிவினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க குறிப்பிட்ட பிரிவினரின் மக்கள்தொகையை அறிந்து கொள்வது அவசியம்.


SC/ST பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டு அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வேண்டும். ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக அரசு விரும்பவில்லை. 


அத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிர்வாக ரீதியாக கடினமானது மற்றும் சிக்கலானது என்றும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரம்பிலிருந்து அத்தகைய தகவல்களைத் தவிர்ப்பது  கொள்கை முடிவு என்றும் செப்டம்பர் 2021இல், பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது" என்றார்.


இடஒதுக்கீடு விவகாரத்தில், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் எடுத்துள்ள நிலைபாட்டையே ராகுல் காந்தியும் எடுத்துள்ளார்.