லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினையை கிளப்பி வருகிறது. ஜனநாயகம் குறித்து  ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்றும் ராகுல் காந்தி விவகாரம் அவை நடவடிக்கைகளை முடக்கியது.


ராகுல் காந்தி விளக்கம்:


இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் ராகுல் காந்தி, இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். 


"காலையில் நாடாளுமன்றத்துக்குச் சென்று சபாநாயகரிடம் (லோக்சபா) பேச வேண்டும் என்று அனுமதி கேட்டேன். அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எனவே, எனது கருத்துக்களை அவையில் முன்வைக்க எனக்கு உரிமை உள்ளது. நாளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன்.


சில நாட்களுக்கு முன்பு, மோடி மற்றும் அதானி குறித்து கேள்வி எழுப்பி நாடாளுமன்றத்தில் பேசினேன். அதானிக்கு பிரதமர் மோடி எந்தளவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்பதை பற்றி பேசினேன். அதானி குறித்து நான் பேசியதில் ஆட்சேபத்துக்குரியது எதுவும் இல்லை.


பிரதமர் பயப்படுகிறார்:


ஆனால், அந்த உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பொதுவெளியில் இல்லாததை ஒன்றும் நான் பேசவில்லை. அதானி விவகாரத்தில் அரசாங்கமும் பிரதமரும் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் இந்த நாடகத்தை தயார் செய்துள்ளனர். 


நான் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட மாட்டேன் என்று நினைக்கிறேன். மோடிக்கும் அதானிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் முக்கியமான கேள்வி. நாட்டை பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை" என்றார்.


ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல்:


முன்னதாக, பிரிட்டனில் ஜனநாயகம் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் நீதித்துறை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. 



இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களும், பத்திரிகைகளும் தாக்கப்படுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை, நாங்கள் எதிர்கொள்கிறோம். 


பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்த யாத்திரை தன்னை ஒரு அரசியல்வாதியாக மாற்றியுள்ளது. கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் நடைபயணம் மேற்கொண்டோம்” என்றார்.


இதையும் படிக்க: தொடர் பிரச்னையை கிளப்பும் ராகுல் காந்தி விவகாரம்: 4ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் - இரு அவைகளும் ஒத்திவைப்பு