கடந்த ஜனவரி 31ஆம் தேதி, நாடாளுமன்ற நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.


இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்கட்சிகள்தான், நாடாளுமன்றத்தில் எப்போதும் அமளியில் ஈடுபடும்.


எதிர்க்கட்சியினர் vs ஆளுங்கட்சியினர்:


ஆனால், ஜனநாயகம் குறித்து லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதித்தன.


குறிப்பாக, ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்னையை கிளப்பி வரும் நிலையில், நான்காவது நாளான இன்றும் ராகுல் காந்தி விவகாரம் அவை நடவடிக்கைகளை முடக்கியது.


இரு அவைகளும் ஒத்திவைப்பு:


இதையடுத்து, நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தொடர் அமளி ஏற்பட்டது. இன்றைய நாள் கூடியதும், சபாநாயகர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.


பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளில் இருந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். ராகுல் காந்தியின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர்.


நாடாளுமன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கும்படி இரு தரப்பினரையும் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். "நான் சபையை நடத்த விரும்புகிறேன். உங்களுக்கு பேசுவதற்கு போதுமான வாய்ப்புகளையும் போதுமான நேரத்தையும் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் இருக்கைகளுக்கு செல்ல வேண்டும். 


அவையின் மத்திய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டுவிட்டு பிறகு வெளியில் சென்று பேச வாய்ப்பு தரவில்லை என குற்றம்சாட்டுகிறீர்கள். இது சரி அல்ல. அவை சீராக செயல்பட வேண்டும். அவையை நடத்த அனுமதிக்க மாட்டீர்கள். முழக்கங்களை எழுப்புகிறீர்கள். நாடாளுமன்றத்திற்கு கண்ணியம் உள்ளது. நாம் அனைவரும் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்" என ஓம் பிர்லா தெரிவித்தார்.


மாநிலங்களவையும் முடக்கம்:


இதற்கிடையில், மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, இன்று மீண்டும் கூடியது. மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் தொடர் அமளி ஏற்பட்டது. இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.