இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய நாட்டை அவமதிக்கும் வகையிலும் எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், இதுகுறித்து விளக்கமளிப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து, ராகுல் காந்தி தவறாக பேசியதாக, நாடாளுமன்றத்தில் பாஜகவினர் கோசம் எழுப்பியும், விளக்கம் அளிக்க கோரியும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
மேலும், அதானி விவகாரம் குறித்தும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் எதிர்க்கட்சிகள் அதானி விவாகாரம் குறித்து கேள்வி எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
இதையடுத்து, பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார். பிற்பகலில், அவர் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.