மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி  சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்திவருகின்றனர். இந்தநிலையில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 


அதில், "எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.


அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார். நான் அவரை மிகவும் பிரிந்து வாடுகிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 






ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில் ராகுல்காந்தி பதிவிட்ட இந்த கருத்து காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 17 ம் தேதி பேரறிவாளன் விடுதலை என அறிவிக்கப்பட்டபோது, தமிழக காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தினர். ராகுல்காந்தியின் இந்த மனிப்பு பதிவை எந்தவகையில் காங்கிரஸ் கட்சியினர் எடுத்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. 


அதேபோல், கடந்த 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி சென்ற ராகுல்காந்தி அங்குள்ள அரசு மகளிர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது மாணவிகளுடன் நடந்த உரையாடலின்போது ஒரு மாணவி ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்பினார். அதில், "உங்கள் தந்தை விடுதலைப் புலிகளால் (தமிழீழ விடுதலைப் புலிகள்) கொல்லப்பட்டார், இவர்களைப் பற்றி நீங்கள் நினைப்பது என்ன..? என்று கேட்டார். 


அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது எனக்கு கடினமான நேரம். உங்களில் யாராவது உங்கள் தந்தையை இழந்திருந்தால், என் வலியை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். என் தந்தையை இழந்தது என் இதயத்தை உடைப்பது போன்றது, அது மிகவும் வேதனையானது. ஆனால் என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை" என்று தெரிவித்தார். அந்த கருத்தும் காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண