இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் சார்பாக சமீபத்தில் குடல் அழற்சி நோயாளிகளுக்குப் பிரத்யேக கவனம் அளிக்கும் விதமாக `IBD NutriCare App' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடல் நோய்கள் ஆய்வு, மருத்துவ முறைகள் ஆகியவற்றை மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்தப் புதிய செயலியின் மூலமாக உணவுப் பழக்கங்கள் கடைபிடித்தலில் ஏற்படும் பிரச்னைகள், தவறான தகவல்கள் ஆகியவை குறித்து ஊட்டசத்து நிபுணருக்கு ரியல் டைம் டேட்டா வழங்கப்படுகிறது.


IBD NutriCare App என்ற இந்த செயலி ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆகியவற்றில் செயல்படக்கூடிய டிஜிட்டல் உடல்நலன் செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது. குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் டேட்டாவையும், அவர்களின் ஊட்டச்சத்து, உணவுப் பழக்கம் ஆகியவற்றை ரியல் டைம் முறையில் அன்றாடம் கண்காணிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 



ஒரு நோயாளியின் இருப்பிடம், மருந்து உட்கொள்ளும் முறை, தினம் உட்கொள்ளும் ஊட்டசத்துகளின் அளவு, மருத்துவப் பிரச்னைகளின் அறிகுறிகள், நோயின் கால அளவு முதலானவற்றைப் பதிவு செய்வதற்கு உதவும் இந்த செயலியில் 650 வகையான இந்திய உணவு வகைகளின் ஊட்டச்சத்து அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குடல் நோய்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் சிறப்பு மையத்தைச் சேர்ந்த மருத்துவர் வினீத் அஹுஜாவை முதன்மை ஆய்வாளராகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2019-ஆம் ஆண்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பாக குடல் நோய்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் சிறப்பு மையத்தின் மூலமாக குடல் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செயலி டெவலபர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் மூலமாக டிஜிட்டல் உடல்நலன் செயலி மூலமாக கலாச்சாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் புரிதலோடு உருவாக்கப்பட்டுள்ளது. 



IBD NutriCare App தற்போது நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, தமிழ், மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. 


கடந்த 2017ஆம் ஆண்டு, குடல் நோய் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றி, கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சுமார் 14 லட்சம் பேர் எனக் குறிப்பிட்டிருந்தது. அதே வேளையில் அமெரிக்காவில் இதே நோயால் சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்தியாவில் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதும், மேற்குலகில் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


செரிமானப் பாதையில் தொற்று அல்லாத விதமாக உருவாகும் அழற்சியே குடல் அழற்சி நோய் என அழைக்கப்படுகிறது. வாய் முதல் ஆசனவாய் வரையிலான செரிமானப் பாதையில் எங்கும் இந்த அழற்சி ஏற்படலாம்.