1991ஆம் ஆண்டு: தந்தை ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது படுகொலை செய்யப்படுகிறார். 21ஆவது பிறந்தநாளுக்கு பதினைந்து நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி மீது இந்திய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்குகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் அவரை மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.


2002ஆம் ஆண்டு: லண்டனில் சிறிது காலம் பணிபுரிந்த பிறகு, ராகுல் காந்தி இந்தியா திரும்புகிறார்.


2004ஆம் ஆண்டு: மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததன் மூலம் அரசியல் களத்தில் கால் பதிக்கிறார். 
உத்தரப்பிரதேசத்தில் நேரு குடும்பத்தின் கோட்டையான அமேதி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெறுகிறார்.


2006ஆம் ஆண்டு: நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், ரே பரேலி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது தாய் சோனியா காந்தியின் பிரச்சாரத்தை நிர்வகிக்கின்றனர். முடிவில், நல்ல வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வெற்றி பெறுகிறார்.


2007ஆம் ஆண்டு: காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுகிறார். கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவுகள், ராகுல் காந்தியின் கீழ் செயல்பட தொடங்குகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக நியமிக்கப்படுகிறார். இருப்பினும், அந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது. 403 இடங்களில் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது.


2009ஆம் ஆண்டு: மக்களவைத் தேர்தலின் போது, நாடு முழுவதும் 125 பேரணிகளில் கலந்து கொண்டு ராகுல் காந்து உரையாற்றினார், அமேதி தொகுதியில் வெற்றி பெறுகிறார். மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுகிறது.


2011ஆம் ஆண்டு: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் பட்டா பர்சௌலில் கைது செய்யப்பட்டார். 


2012ஆம் ஆண்டு: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற ராகுல் காந்தி, 200க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தினார். 403 தொகுதிகளில் 28 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெறுகிறது.


2013ஆம் ஆண்டு: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கப்படுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்படுவோர் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால், தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அவசர சட்டத்தின் நகலை கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.


2014ஆம் ஆண்டு: இந்திய அரசியல் வரலாற்றில் மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்திக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த மக்களவை இடங்களில் வெற்றிபெறுகிறது.


2015-2016: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது. ராகுல் காந்தி, தலைமையில் பிரச்சாரம் நடைபெற்ற போதிலும், அது காங்கிரஸ் கட்சிக்கு பலன் அளிக்கவில்லை.


2017ஆம் ஆண்டு: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுகிறார்.


2018ஆம் ஆண்டு: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது.


2019ஆம் ஆண்டு: தொடர்ந்து இரண்டாவது முறையாக, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது. அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றதால் நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ராகுல் காந்தி. ஆனால், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தார்மீக பொறுப்பேற்ற தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுகிறார்.


2022ஆம் ஆண்டு: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறார்.


2023ஆம் ஆண்டு: அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.