நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, வரும் 26ஆம் தேதி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. 


முட்டி மோதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்:


கேரளாவை பொறுத்தவரையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக உள்ளது. தேசிய அளவில் கூட்டணி அமைத்தாலும் கேரளாவை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் பரம எதிரிகளாக உள்ளன. கடந்த 1982ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தது.


ஆனால், 39 ஆண்டுகளில் முதல்முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் முதல்முறையாக ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கூட்டணி வென்றது.


கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை கணிசமான தொகுதிகளை கைப்பற்ற மார்க்சிஸ்ட் கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், 2019 மக்களவை தேர்தல் போல் மாபெரும் வெற்றியை பதிவு செய்ய காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது.


பினராயி விஜயனை அட்டாக் செய்யும் ராகுல் காந்தி:


இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பினராயி விஜயன் மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கோழிகோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஏன் அவரை (விஜயனை) ED, சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லை? இரண்டு மாநில முதலமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள்.


ஆனால், கேரள முதலமைச்சருக்கு இது எதுவுமே நடக்கவில்லையே? நான் பாஜகவை 24x7 விமர்சித்து வருகிறேன். ஆனால், முதலமைச்சர் என்னை தாக்குகிறார். இது சற்று குழப்பமாக உள்ளது" என்றார்.


இதற்கு பதிலடி அளித்த பினராயி விஜயன், "ராகுல் காந்தியின் பாட்டி (இந்திரா காந்தி) பெரும்பாலான இடதுசாரித் தலைவர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்தார். இடதுசாரித் தலைவர்கள் சிறைக்குச் செல்ல பயப்படுவதில்லை. அசோக் சவானை (காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்) போல இடதுசாரித் தலைவர்கள் ஒருபோதும் அழுது, சிறைக்குச் செல்ல முடியாது என்று கூற மாட்டார்கள்" என்றார்.


இந்த நிலையில், பினராயி விஜயனை தாக்கி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, "கால்பந்து போட்டியில் சமரசம் செய்துகொண்ட வீரருடன் ஜெயிக்க முடியாது. அதே போல் சமரசம் செய்தவர் உங்களின் முதலமைச்சர். அவர் எனது சகோதரர் (ராகுல் காந்தி) மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே தாக்குகிறார். அவர் பாஜகவை தாக்கவில்லை.


நீங்கள் இதைப் பற்றி யோசித்தீர்களா? லைஃப் மிஷன், தங்கக் கடத்தல், பல மோசடிகளில் அவரது பெயர் அடிப்பட்டது. ஆனால், பாஜக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. அவரிடம் விசாரணை நடத்தவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.