காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து நடைபயணம் தற்போது மகாராஷ்டிராவில் உள்ளது.
நடைபயணத்தின் பல்வேறு தரப்பினரிடம் ராகுல் காந்தி உரையாடி வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை, பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், தேசிய கீதத்தை இசைக்க சொல்லி ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால், வேறு மொழியில் வேறு பாடல் ஒலிக்கப்படுகிறது. மேடையில் நின்று கொண்டிருந்த ராகுல் காந்தி குழப்பம் அடைகிறார்.
வைரலாகி வரும் வீடியோவில், இப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ராகுல் காந்தி மைக்கில் அறிவிப்பதும் அதை கேட்டு மக்கள் அனைவரும் எழுந்து நிற்பதும் பதிவாகியுள்ளது. வேறு எதோ பாடல் ஒன்று ஒலிக்கத் தொடங்குகிறது. அதை, ராகுல் காந்தி ஆச்சரியமாக பார்க்கிறார். அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரைப் பார்த்து ராகுல் சைகை செய்கிறார்.
அவர், இசையை ஒலித்த நபரை அழைத்து பேசுகிறார். உண்மையில் அங்கு ஒலிக்கப்பட்டது, நேபாள தேசிய கீதம் என சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இறுதியாக, இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. ஆனால், நீண்ட, ஐந்து சரணங்கள் கொண்ட தேசிய கீத பதிப்பு ஒலிக்கப்படுகிறது.
முதல் சரணத்திற்குப் பிறகு கீதம் முடிந்துவிட்டதாக நினைத்து, ஒரு தலைவர் அது இசைத்துக் கொண்டிருக்கும்போதே "பாரத் மாதா கி ஜெய்" என்று கத்த ஆரம்பிக்கிறார்.
இதை தொடர்ந்து, பாடல் நிறுத்தப்பட்டது. பல பாஜக தலைவர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ராகுல் காந்தியை கேலி செய்து, தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் “ராகுல் காந்தி, என்ன இது?” என்ற கேள்வியுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம், வரும் நவம்பர் 20ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தை அடைய உள்ளது.