கிட்டத்தட்ட 22 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருவதால் அவர் எங்கு வாக்களிக்கபோகிறார் என்பது கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இதற்கான பதிலை காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.


அதன்படி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் ராகுல் காந்தி வாக்களிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 






இதுகுறித்து ஜெய்ராம் ரமேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி நாளை எங்கு வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த ஊகமும் இருக்கக்கூடாது. அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளான சுமார் 40 பாரத யாத்ரிகளுடன் பெல்லாரி சங்கனக்கல்லுவில் உள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் முகாம் தளத்தில் வாக்களிப்பார்" என பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயயணம், தற்போது கர்நாடகாவை எட்டியுள்ளது. தற்போதுவரை, கிட்டத்தட்ட 1000 கிமீட்டருக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


அனைவரின் கவனமும் காங்கிரஸ் தேர்தல் பக்கம் திரும்பியுள்ள நிலையில், அடுத்த காங்கிரஸ் தலைவர் சுதந்திரமாக இயங்குவாரா அல்லது காந்தி குடும்பத்தின் நிழலில் இயங்குவாரா என்ற கேள்வியை அரசியல் வல்லுநர்கள் முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், கட்சியின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் முடிவுகளை எடுப்பதற்கும், அமைப்பை நடத்துவதற்கும் சுதந்திரம் இருக்கும் என்று ராகுல் காந்தி தெளிவுப்படுத்தியுள்ளார்.


கர்நாடகாவில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருக்கும் தனித் தனியே பார்வைகள் உண்டு. அவர்களுக்கு என சொந்த கருத்துகள் உள்ளன. அவர்களை 'ரிமோட் கண்ட்ரோல்' என்று அழைப்பது இருவரையும் அவமதிக்கும் செயலாகும்" என்றார்.