உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாநிலத்தில் நடத்தப்பட்ட அரசு பணியாளர் தேர்வில் கலந்து கொள்வதற்காக மக்கள் தேர்வு மையத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வருகின்றனர்.
உத்தர பிரதேச துணைப் பணிகளுக்கான தேர்வு ஆணையத்தின் முதற்கட்டத் தகுதித் தேர்வு (PET) என்பது, எதிர்காலத்தில் நடைபெறும் குரூப் c பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொள்வதற்கான தகுதி தேர்வாகும். இன்றுடன் முடிவடைந்த இரண்டு நாள் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர்.
தெற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் நேற்று இரவு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிளாட்பாரங்களில் தேர்வை எழுத வந்தவர்கள் நிரம்பியிருந்ததையும் ரயிலில் ஏற அவர்கள் கஷ்டப்பட்டதையும் காணலாம். ரயில் பெட்டிகளுக்குள் மக்கள் நிற்க கூட இடம் இல்லாதது பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்களின் மூலம் தெரிகிறது.
மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஹாபூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலை பிடிக்க தேர்வை எழுத வந்தவர்கள் ஓடுவது பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
தேர்வு மையங்களில் இருந்து திரும்புபவர்கள் கான்பூரின் சார்பாக் ரயில் நிலையத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அதில், "ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டம் இருப்பதால், தேர்வு மையங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது" என்றனர்.
உத்தர பிரதேச போக்குவரத்துத்துறை அமைச்சர் தயாசங்கர் சிங் இன்று பரேலி பேருந்து நிலையத்தில் தேர்வர்களிடம் பேசினார். இன்று மாலை தேர்வுகள் முடிவடைந்தவுடன் போதுமான பேருந்துகளை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
மக்கள் நிரம்பி வழியும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ட்வீட் செய்த எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த குழப்பம் மற்றும் தேர்வர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு உத்தர பிரதேச அரசாங்கமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.