இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி என எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை.
நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் பொறுப்பேற்க இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” என தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் எலான் மஸ்க்..?
அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப் கென்னடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அசோசியேட்டட் பிரஸ் படி, Puerto Rico இன் முதன்மைத் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான வாக்குப்பதிவு முறைகேடுகளை சந்தித்து வருகிறது.
அதிர்ஷ்டவசமாக, பேப்பரின் இருந்த தடத்தை கொண்டு சிக்கல் கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. காகிதத் தடம் இல்லாத அதிகார வரம்புகளில் என்ன நடக்கிறது?
அமெரிக்க குடிமக்கள் தங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் எண்ணப்பட்டன என்பதையும், அவர்களின் தேர்தல்களை ஹேக் செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல்களில் மின்னணு குறுக்கீட்டைத் தவிர்க்க, வாக்குச் சீட்டு முறையை நாம் திரும்ப கொண்டு வர வேண்டும்.
எனது நிர்வாகத்திற்கு பேப்பர் மூலம் ஓட்டு போடும் முறையான வாக்குச்சீட்டு முறை தேவைப்படும், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்.” என குறிப்பிட்டிருந்தார். இதை ரீ-ட்வீட் செய்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் முறைகேடு செய்தாலும் அது பெரியதுதான்.” என தெரிவித்தார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவையே ரீ-ட்வீட் செய்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி என எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.