மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவானது பசுக்கள், கன்றுகள் போன்ற இழுவை கால்நடைகளை கொல்வதைத் தடை செய்கின்றது. உச்ச நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தை உறுதி செய்தது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. சில மாநிலங்கள் இதனை அமல்படுத்தவில்லை. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் அவ்வப்போது பசுபாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல்களும், கொலைகளும், கைது படலமும் நடந்துள்ளது. 


மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நைன்பூரில் உள்ள  மாண்ட்லா பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பைன்வாஹி பகுதியில் இறைச்சிக்காக ஏராளமான பசுக்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாண்ட்லா காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் புகாரில் உண்மை இருப்பது தெரிந்தது. 






குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளின் கொல்லைப்புறத்தில் 150 மாடுகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர். அதில் 11 பேரின் வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட இறைச்சி மாட்டிறைச்சி என்பதை உள்ளூர் அரசு கால்நடை மருத்துவர் உறுதி செய்தார். 


இதனைத் தொடர்ந்து 11 பேரின் வீடுகளும் அரசு நிலத்தில் இருந்ததாக கூறி இடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை பிடிக்கும் பணி மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட 150 பசுக்களும் கால்நடை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் என்றும், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இத்தகைய குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் மாண்ட்லா காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா தெரிவித்துள்ளார். 


மத்தியப் பிரதேசத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுப்பட்டுள்ளது. அங்கு தடையை மீறி குற்றம் செய்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.